Tuesday, April 28, 2020

மெய் ஞானத்தை அடையும் வழி பகுதி-2



மெய் ஞானத்தை அடையும் வழி பகுதி-1-ல் பிரபஞ்சத்தைப் பற்றியும் ஆண்டவரின் தன்மை புராண கடவுளுக்கு ஒப்புநோக்குகையில் எந்த அளவு உயர்ந்தது என்பதை சுருக்கமாகசத்விசாரம் செய்தோம்.
அடுத்த கட்டமாக பகுதி-2-ல் மெய் ஞானத்தை அடைவதற்கு செய்யவேண்டிய செயல்பாடுகளை பற்றியும் அதற்கு செலவாகக்கூடிய காலத்தின் அளவுகளையும் ஆய்வு செய்வோம்.

சன்மார்க்கத்தில் மெய்ஞானம் என்பது சாதக நிலை (பயிற்சி நிலை) சாத்திய நிலை (அடைவு நிலை என்று இரண்டு பகுதிகளாக உள்ளது. சன்மார்க்கத்தின் மூலமாக மெய்ஞானம் அடைய விரும்புவோர் எந்த வகையான பயிற்சிகளை மேற்கொண்டு அடையலாம் என்பதையும் பார்ப்போம்.
சாதக நிலையிலிருந்து சாத்திய நிலையடைய விரும்புவோர் நாளை பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தை முதலில் கைவிடவேண்டும். ஒரு நாளைக்கு 24 மணிநேரம் உள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் 5 மணிநேரம் முதல்மணிநேரம் வரை தூக்கத்திற்காக செலவழிக்கிறார்கள் நேரம் போதவில்லை என்று கூறுபவர்கள் அன்பு கூர்ந்து தாம் தூங்குகின்ற நேரத்தில் 1 மணிநேரத்தை சன்மார்க்க பயிற்சிக்காக ஒதுக்கி தூக்கத்தை தினசரி அட்டவணையில் 1 மணிநேரம் குறைத்துக்கொள்ள வேண்டியது. 1 மணிநேரம் குறைவாக தூங்கி அதில் சன்மார்க்க சாதகர் நிலையில் பயிற்சி செய்தால் அவருடைய ஆயுளில் குறைந்தபட்சம் 2 மணி நேரம் கூடும்.தினசரி 1 மணிநேரம் மட்டும் சன்மார்க்க சாதக பயிற்சிக்காக நேரம் ஒதுக்குபவர்கள் எத்தனை நாளில் சாத்திய நிலையடையலாம் என்பதை கணக்கீடு செய்யலாம்.

சன்மார்க்கத்தில் 1.திருமுறை நிலை 2.அகவல் நிலை 3.மந்திர நிலை 4.மந்திரம் கடந்த நிலை என்று நான்கு நிலைகள் உள்ளன.(இதன் விவரங்களை எமது சத்யயுகமும் சன்மார்க்கமும் என்ற நூலில் காண்க).
திருமுறை நிலையை கடக்க செய்ய வேண்டியது யாதெனில் ஆறுதிருமுறைகளில் உள்ள 6000 பாடல்களையும் ஒருமுறை மனமுருக படிக்க வேண்டும் ஏற்கனவே அருட்பா முற்றோதல் முறையில் அனைத்து பாடல்களையும் படித்திருந்தால் அதை கணக்கில் எடுத்து கொள்ளலாம்.அவ்வாறு படிக்காதவர்கள் தினசரி 1மணி நேரம் திருமுறைகளை படித்தால் 120 மணி நேரத்தில் திருமுறைகளை முடிக்கலாம் அதாவது திருமுறைகளை முற்றிலும் படித்து முடிக்க நான்கு
மாதங்கள் ஆகும்.

அடுத்ததாக மகாமந்திரம் அல்லது தாரகமந்திரம் இவைகளை குறைந்த பட்சம் 1 லட்சம் முறை (தான் சொல்வது தனது காதிலேயே விழும் வகையில் குறைந்த தொனியில்) உச்சரிக்க வேண்டும் இவ்வாறு உச்சரிப்பதில் மனத்தொய்வு இல்லாமல் ஈடுபாட்டுடன் உச்சரிக்க வேண்டி சன்மார்க்க சாதகர்கள் ஒவ்வொரு ஆண்டும் 112 நாள் விரதமிருந்து தினசரி ஒருமணி நேரம் மந்திர ஜபம் செய்ய வேண்டும். இவ்வாறாக முன்று ஆண்டுகள் விரதமிருந்து ம்ந்திர ஜபம் செய்தால் 1
லட்சம் மந்திரம் பூர்த்தி ஆகும்.
அதாவது சரியை,கிரியை நிலையில் மகாமந்திரம் சொல்ல 1 முறைக்கு 10 நொடிகள் பயன்படுத்த வேண்டும். மூச்சை உள்நோக்கி இழுப்பது 2 நொடிகளும், மூச்சை வெளியிட்டு ம்ந்திரம் சொல்ல 8 நொடிகளும் செலவாகும். இப்படி செய்தால் ஒரு நிமிடத்திற்கு 6 முறையும் ஒருமணி நேரத்திற்கு 360 முறையும் மந்திரம் உச்சரிக்கப்படும் 112 நாளில் 4032 முறையும் மந்திர ஜபம் முடிக்கலாம். 3 ஆண்டுகளில் 120960 முறை மந்திர ஜபம் செய்து முடிக்கலாம்.
மேலும் திருமுறை நிலையை கடக்க வள்ளல் பெருமானை குருவாகக்கொண்டு இறைவன் ஒருவரே என்ற கொள்கையில் முழு ஈடுபாடு கொண்டவராக இருக்க வேண்டும்.சமய தேவர்களையும் மனதில் வைத்துக்கொண்டு இந்த நிலையை கடக்கும் ஆவல் கொண்டால் இயலாமல் போய்விடும்.
இவ்வாறாக திருமுறையை கடந்து அகவல் நிலையை அடைய தினசரி 1 மணி நேரம் ஒதுக்குபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் செலவாகும்.

அடுத்ததாக அகவல் நிலையை கடக்க வேண்டுமாயின் ஒரு சாதகர் ஆயிரம் முறை அகவல் படிக்க வேண்டும் தினசரி ஒருமுறை அகவல் படிக்க வேண்டும் தினசரி ஒருமுறை அகவல் படித்தால் மூன்று ஆண்டுகளில் ஆயிரம் முறை படித்து முடிக்க்லாம். முதலில் அகவல் படிக்கும் போது 2 மணி நேரமும் ஆகும் என்பதால் பாதிபாதியாக படிக்ககூடாது.

ஒருநாளைக்கு ஒரு முறையாகிலும் படித்து முடிக்க வேண்டும் முழு ஈடுபாட்டுடன் படித்து வரும் பட்சத்தில் ஒருகாலக்கட்டத்தில் 24 நிமிடத்தில் அகவல் படித்து முடிக்கலாம். ஒரு எழுத்துக்கூட தவறு இல்லாமல் உச்சரிக்க வேண்டும் அடுத்ததாக மந்திர நிலையில் யோக தாரகம்ந்திரம் தொடர்ந்து 108 நாளும் யோக மகமந்திரம் தொடர்ந்து இடைவெளியில்லாமல் 108 நாளும் யோகம் செய்யவேண்டும்.யோக தாரக மந்திரம் மூலம் யோகம் செய்கையில் மந்திர புறநிலையையும்,யோக மகாமந்திரத்தை பயன்படுத்தி யோகம் செய்கையில் மந்திர அகநிலையயும் கடக்கலாம்,ம்ந்திர
நிலையில் உள்ள இந்த இரண்டு நிலைகளையும் கடக்க இரண்டு ஆண்டுகள் ஆகும்.

மேலும் மந்திரங் கடந்த நிலையில் சாத்திய நிலைக்கு சாட்சியங்கள் ஏற்பட 1 ஆண்டுகள் ஆகக்கூடும்.சாதகநிலையிலேயே சாட்சியங்களை ஆண்டவரிடம் விண்ணப்பித்து உருவாக்க நினைத்தால் ஒரு விண்ணப்பத்திற்கு 12 முறை அகவல் படித்த சக்தியானது செலவழிந்து விடும். அதே நேரத்தில் ஆன்மநேய ஒருமைப்பாட்டை கைகொள்ளும் சன்மார்க்க அன்பர்கள் இறைவனால் அனுப்ப பட்ட மனிதர்களுக்காக சாதக நிலையிலும் விண்ணப்பம் வைத்து பிரச்சனைகளை தீர்ப்பதின் மூலம் ஆன்மநேயத்தை உருவாக்கி செயல்பட்டுத்தான் ஆகவேண்டும். நாமாகவலியச் சென்று
யாரிடமும் சன்மார்க்க சக்தியினால் இடையூறு களைவதாக கூறகூடாது.
எல்லா ஜீவர்களிடத்தும் இறைவன் இருப்பதால் யாரையும் காலில் விழ சொல்லவோ விழுவதை அனுமதிக்கவோ கூடாது. அவ்வாறு செய்தால் சாதகர் அசுர சக்தியாக ஆண்டவரால் கணிக்கப்பட்டு கடும் தண்டனைக்கு ஆளாவார். வள்ளல் பெருமானும் தம் பொருப்பிலிருந்து அவரை ஆண்டவரிடம் ஒப்புகொடுத்து விடுவார்மேலும் தினசரி 1 மணிநேரம் என்பதை உயர்த்தி 3 மணிநேரம் வரை சாதகம் செய்யலாம், அதற்கு மேல் செய்தால் மனித உடல் மந்திர சக்தி தாங்காது. தினசரி 1 மணிநேரம் சாதகம் செய்வதின் மூலம் 9 ஆண்டுகளில் சாதகநிலையிலிருந்து சாத்திய நிலை அடையலாம். அதேநேரத்தில் வழிப்பாட்டிலும் 16 வது நிலையான ஞானத்தில் ஞானம் அடையலாம்.
மேலும் ஒரு மனிதர் 50 வயதுக்குள் சாத்திய நிலை அடைந்துவிட வேண்டும். அதற்குள் மந்திரங்கடந்த நிலைக்கு பிரவேசித்து விட வேண்டும். 50 வயதுக்கு மேல் முயற்சி செய்தால் உடல் ஒத்துழைக்காது. எனவே அன்பர்கள் 41 வயதுக்குள் சாதக நிலை கை கொண்டு செயல்பாட்டை ஆரம்பிக்க வேண்டியது.
இந்த செயல் முறை அனைத்தும் குடும்பத்தில் உள்ள சன்மார்க்கி அனைவரும் சுலபமாக கடைப்பிடித்து சாத்திய நிலை அடையலாம்.

மெய் ஞானத்தை அடையும் வழி பகுதி-2 என்பது காலத்தை நிர்ணயிக்க வெளிபடுத்தப்பட்டது. இதன் விவரங்கள் அனைத்தும் எமக்கு வள்ளல் பெருமான் உணர்த்தி எழுதப்பட்ட " சத்ய யுகமும் சன்மார்க்கமும்" என்ற நூலில் உள்ளதுஅந்த நூலை படிக்காமல் இந்த செய்தியை விவரித்துக் கொண்டு சென்றால் புரிந்து கொள்வதற்கு சிறிது கடினப்பட்டுவிடும்எனவே அந்த நூலில் உள்ள 12 அத்தியாயங்களும் ஒவ்வொன்றாக இந்த பகுதியில் வெளியைடுகிறோம்.

நூலின் முதல் அத்தியாயமான "பண்டைய காலத்தில் வழிப்பாட்டின் தோற்றம்" என்ற தலைப்பில் உள்ள கருத்துகோர்வையை ''மெய் ஞானத்தை அடையும் வழி பகுதி-3" என்ற தலைப்பில் வெளியிடப்படும்.



சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக

உத்தம னாகுக வோங்குக வென்றனை


No comments:

Post a Comment