Saturday, May 2, 2020

மெய் ஞானத்தை அடையும் வழி பகுதி-5


காலத்தின் அளவுகளும் கலியுக முடிவும்
காலமு நியதியுங் காட்டி யெவ்வுயிரையும்
ஆலுறக் காத்தருளருட் பெருஞ்ஜோதி - (அகவல் 755-756)


ஆண்டவரின் படைப்பில் காலம் என்பது மிகவும் அதிசயிக்க தக்க வகையில் விசித்திரமானது. காலம் என்பது ஒரு வரையறைக்கு உட்படாதது. காலத்தின் அடிப்படை அலகு எனும் கை நொடி பொழுது தவிர மற்ற அலகுகள் இடத்திற்கு தக்கவாறு அவ்வப்போது மாறுபடும்.

எனவேதான் நமது முன்னோர்கள் காலத்தின் அடிப்படையில் வரிசைக் கிரமமாக வரலாற்றை தொகுக்க முற்படவில்லை. இருப்பினும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு காலத்தை பகுத்து வைத்தார்கள்.
காலம் என்பது நொடி, வினாடி, நாழிகை, முகூர்த்தம், ஜாமம், நாள், வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம், பக்சம், மாதம், ருது, அயனம், வருடம், யுகம், மனு, கல்பம், என்று பல்வேறு அடிப்படையில் ஞானிகளால் நிகழ்வுகளைக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டது.
பண்டைய நாட்களில் வரலாறுகள் பிற நிகழ்வு வரலாற்றுடன் ஒப்பாய்வு செய்து எழுதப்படாமல் யுகங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டன.
நமது பண்டைய வரலாறு தற்போது வரலாற்று ஆசிரியர்களால் இரண்டு முக்கிய காரணங்களால் புறக்கணிக்கப்படுகின்றன.
முதல் காரணம், வரலாற்று நாயகர்களுக்கு காலங்கள் கடந்து வந்த சூழ்நிலையில் புலவர்களால் தெய்வத் தன்மைகள் புகுத்தப்பட்டு அவர்களது கற்பனைத் திறன் வெளிப்படுத்தப்பட்டது.
இரண்டாவதாக வரலாற்று விஷயங்கள் ஒன்றுக்கொன்று காலத்தால் தற்போதுள்ள முறைப்படி தொகுக்கப்படாமல் யுகங்கள் அடிப்படையில் தொகுக்கப்பட்டன. யுகங்களின் கால அளவுக்கும் அறிவியல் பூர்வமாக தற்போதுள்ள வரலாற்று ஆய்வு முறைகளுக்கும் கொஞ்சம் கூட ஒத்து வரவில்லை.
இதனால் நமது பண்டைய வரலாறுகள் ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் முழுப் பாலையும் விஷமாக்குவது போல் புலவர்களின் கற்பனைத்திறன் எனும் விஷமும் காலக் கணக்கு சரிவரவில்லை எனும் விஷமும் சேர்ந்து நமது பண்டைய வரலாறு எனும் பாலையும் அதிலுள்ள வரலாற்று சிறப்பு எனும் சுவையையும் கெடுத்து, புராணம் எனும் பெயரிட்டு வரலாற்றுக்கு ஏற்புடையத்தல்ல என்று முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு நமது கடந்த கால பெருமைகள் அனைத்தும் சீரழிக்கப்படுகின்றன.
இந்த சூழலில் நமது ஞானகுரு வள்ளல் பெருமான் அவர்கள் தமது ஆறாம் திருமுறை வசன பாகத்தில் கலியுகம் என்பது 5000ஆண்டுகள்தான் இனி கலிபுருஷன் காலம் முடிந்து ஞானசித்தர் காலம் உருவாகிறது என்று அருளியுள்ளார்.

இந்த வார்த்தைகளை அடிப்படையாகக்கொண்டு யாம் யோக நிலையில் வள்ளல் பெருமானின் மேற்படி வசனத்திற்கு விளக்கம் பெற முயற்சித்தப்போது மிகப்பெரிய புதையல் கிடைக்கப்பெற்றோம். அந்த புதையலை யாம் அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறோம். இந்த புதையலாவது வரலாற்று அறிஞர்களுக்கும் ஆன்மீகவாதிகளுக்கும் ஒரு பெரிய இணைப்பை ஏற்படுத்தும் என நம்புகிறோம்.
நாம் வாழும் பூமியானது உருவாகி கடல்கள் தோன்றியபின் 5 முறை பிரளயம் ஏற்பட்டு கல்ப காலம் முடிந்து அடுத்த கல்பம் ஏற்பட்டது என நமது முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளார்கள். புவியியல் வல்லுநர்களும் அதை உண்மையென ஆய்வின் மூலம் நிருபித்துள்ளார்கள்.
நமது இந்திய மெய்ஞ்ஞானிகள் பிரம்ம கல்பம் என்று கூறும் காலத்தை புவியியல் வல்லுநர்கள் ஆர்க்கியோ சோயிக் என்றும், கூர்ம கல்பம் புரட்டிரோ சோயிக் என்றும், பார்த்திவ கல்பம் பேசியோ சோயிக் என்றும், சாவித்திரி கல்பம் மீச சோயிக் என்றும், பிரளய கல்பம் சென சோயிக் என்றும் பெயரிட்டுள்ளார்கள்.
மேலும் நமது மெய்ஞ்ஞானிகள் வராஹ கல்பம் எனும் கல்பத்தில் வைவஸ்வத மனுவின் காலம் நடந்து வருகிறது என்று கூறியுள்ளார்கள்.
வல்லுநர்கள் இதை பிளைஸ்டோசின் காலம் என்று கூறுகிறார்கள். பூமியில் மனிதன் தோன்றி பத்து லட்சம் ஆண்டுகள் ஆகிறது என்கிறார்கள்.
நமது முன்னோர்கள் யுகங்களை நான்காக கூறி அவற்றின் பெயர்களையும்
க்ருத யுகம் எனும் சத்ய யுகம்
த்ரேதா யுகம்
துவாபர யுகம்
கலியுகம்
என்ற பெயரில் வழங்கி வந்தனர். இந்த நான்கு யுகங்களும் சேர்ந்த ஒரு சுற்றுக்கு சதுர்யுகம் என்று பெயர்.
வள்ளல்பெருமான் அவர்கள் இந்த சதுர்யுகத்திற்கான கால கணக்கில் தற்போதுள்ள நடைமுறை ஆண்டு 365 1/4 நாள் என்பதின்படி 12,000(பனிரெண்டாயிரம்) ஆண்டுகள் என்கிறார்.
இதில் ஒவ்வொரு யுகமும் ஆன்மீக ரீதியாகத்தான் பிரிக்கப்படுகின்றன. வழிபாட்டையும் மனித குணநலங்களையும் அடிப்படையாக கொண்டு இந்த யுகங்கள் பிரித்து அறியப்படுகின்றன.
மேலும் இந்த யுகங்கள் நடக்கும் போது யுக சந்தி ஏற்படுகையில் இரண்டு யுகங்களின் தாக்கமும் குறிபிட்ட காலம் நடைபெறும். முழுமையான யுக மாற்றமும் சிறிது காலத்தில் ஏற்படும்.
இந்த காலங்களானது 12,000 ஆண்டுகள் ஒரு சுற்று வருகையில் பெயர்கள் மனிதர்கள் சூழ்நிலைகள் மாறுபட்டாலும் எந்த கால கட்டத்தை எடுத்துக் கொண்டாலும் அக்கால கட்டத்திற்கு சரியாக 12,000 ஆண்டுகளுக்கு முன்பாக எந்த சூழல் இருந்ததோ அந்த சூழல் மீண்டும் தோற்றமாகும்.
இந்த 12,000 ஆண்டுகளை நான்கு யுகங்களாக பிரிக்கையில் ஒரு விவரமான அறிக்கை ஏற்படுகிறது. இந்த கருத்துக்களை வள்ளல்பெருமான் தமக்கு சமகாலத்தில் இருந்த ஜோதிடர்கள் அறிஞர்களிடமும் எடுத்து கூறியும் பின்னர் பலருக்கு ஞானதேகத்தில் இருந்த நிலையிலேயே கூறியும் சிலர் இந்த கருத்தை வெளிப்படக் கூறியும் இந்த கருத்தானது பிரபலமாக சீர் தூக்கி பார்க்கும் காலம் கனியாததால் பிரபலமடையவில்லை. வள்ளல்பெருமான் அந்த தருணம் தற்போது உதித்தது தாங்கள் இதை முன்னிலைப் படுத்துக என கூறியதன் அடிப்படையில் முன் வைக்கிறோம்.

விவரம்:-
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
யுகப்பெயர் யுக காலம் யுக ஆரம்பம் பூரண யுகம் யுக முடிவு
------------------------------------------------- -------------------------------------------------------------------------------------
க்ருதயுகம் 1200 ஆண்டுகள் 100 1000 100
த்ரேதாயுகம் 2400 ஆண்டுகள் 200 2000 200
துவாபரயுகம் 3600 ஆண்டுகள் 300 3000 300
கலியுகம் 4800 ஆண்டுகள் 400 4000 400
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒவ்வொரு யுகத்தின் தாக்கமும் முன் யுகத்தின் முடிவு. அந்த யுகத்தின் காலம், பின் யுகத்தின் ஆரம்பம் சேர்ந்ததாக இருக்கும். இப்படியாக கணக்கிட்டால் யுகத்தின் தாக்கமும் கீழ் கண்டவாறு அமையும்.


இப்படியாக ஒவ்வொரு சதுர்யுகத்திலும் 10,000 ஆண்டுகள் பூர்ண யுகங்களாகவும் 2000 ஆண்டுகள் இரண்டு யுகங்களின் கலந்த கலப்பாக யுக சந்தியாக இருக்கும்.

(
தொடரும்)