Tuesday, April 28, 2020

மெய் ஞானத்தை அடையும் வழி பகுதி-1


இறைவனிடம் வரம்பெற


இறைவனிடம் வரம் பெற முதலில் இறைவனை புரிந்து கொள்ள
வேண்டும். இறைவனின் தன்மையை புரிந்து கொள்ளாமல் இறைவன்
இருக்கிறாரா, இல்லையா என்று வாதிடுவதில் அர்த்தமில்லை.
இறைவனை நான் பார்க்கவில்லை, ஆகவே இறைவன் இல்லை என்று
நாத்திகவாதிகளும் ஆன்மீகவாதிகள் என்பவர்கள், இறைவனை
முழுமையாக புரிந்து கொள்ளாத நிலையில் அதற்கு விளக்கமளிக்க
இயலாத சூழலும் ஏற்பட்டு அதனால் மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள
தொடர்பு முழுமையடையாமல் குழப்பமேற்படுகிறது.

முழுமையான ஆன்மீகவாதிகளும், நாத்திகவாதிகளும் இருதரப்பினரும்
ஏற்றுக்கொள்ளும் வகையில் திருவருட்பாவை உருவாக்கி தனது
முழுமையான ஈடுபாடு, எண்ண எழுச்சிகளினால் இறைவனுக்கும்
மனிதனுக்கும் தொடர்பை பூர்த்தி செய்தவர் நமது ஞான குரு கருணைமிகு
இராமலிங்கம் ஐயா அவர்கள். அவரின் வழிமுறையில் விஞ்ஞானத்தின்
வழியாக மெய்ஞ்ஞானத்தை நாம் சத்விசாரம் செய்ய சிறிது முயற்சி
செய்வோம்.
பிரபஞ்ச அளவு
இந்த பிரபஞ்சம் என்பது ஆயிரம் கோடி ஒளி ஆண்டுகள்
விட்டமுடையது. ஐயாயிரம் கோடி ஒளி ஆண்டுகள் வியாபகமுடையது.
ஒளி தூரம் என்பது ஒரு நொடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர் வீதம்
ஒரு வருடத்தில் எத்தனை கிலோமீட்டர் பயணிக்குமோ அதுவே ஒரு ஒளி
வருடதூரமாகும். அதுபோல் ஆயிரம் கோடி ஆண்டுகளில் ஒளி எவ்வளவு
தூரம் பயணிக்குமோ அதுவே பிரபஞ்ச அளவாகும். பிரபஞ்சத்தில் 80
லட்சம் அண்டங்கள் உள்ளது. ஒவ்வொரு அண்டத்திலும் பதினான்காயிரம்
கோடி சூரியன்கள் உள்ளது. ஒவ்வொரு சூரியனுக்கும் பல கிரகங்கள்
கொண்ட குடும்பம் உள்ளது ஒவ்வொரு அண்டமும் ஒரு லட்சம் ஒளி
ஆண்டுகள் முதல் ஒரு கோடி ஒளி ஆண்டுகள் விட்டமுடையது.


அண்டத்தின் அளவு
நமது அண்டம் பால்வெளி அண்டம் ஒரு லட்சம் ஒளி ஆண்டு
விட்டமுடைய சிறிய அண்டமாகும். நமது அண்டத்தில் நமது சூரியன்
நடுத்தர உருவமுடையதாகும். நமது பூமியைப் போல் 13 லட்சம் மடங்கு
பெரியது நமது சூரியனாகும். நமது பிரபஞ்சத்தை வரைபடமாக
உருவாக்கினால் நமது சூரியக்குடும்பம் அளவு பெரிய காகிதத்தில் (1200
கோடி கிலோமீட்டர் விட்டம்) வரைந்தால் பூமி அதில் குண்டூசி தலை
அளவு தான் இருக்கும்.

இறைநிலையில் இவ்வளவு சிறிய பூமியில் தோன்றிய
மனிதர்களையும், அரசர்களையும், வீரர்களையும், அறிவாளிகளையும்,
அருளாளர்களையும் மக்கள் முழு நம்பிக்கையாக இறைவன் என்று பெயர்
வைத்து வணங்கி கொண்டிருக்கிறார்கள், வணங்குவதோடு நில்லாமல் யார்
கடவுள் உயர்ந்தவர் என்று வீணாக சண்டையிட்டு மடிகிறார்கள்.
இறைவனின் பல்வேறு பெயர்கள்

ஞானிகளாக உருவானவர்கள் இறைவனை மொழி வாரியாக
வெவ்வேறு பெயர் கொண்டு, ஆங்கிலத்தில் God என்றும், வடமொழியில்
பரப்பிரம்மம் என்றும், ரோமானிய மொழியில் க்ரைஸ்ட் என்றும், ஹீப்ரு
மொழியில் அல்லாஹ் என்றும், தமிழ் மொழியில் அருட்பெருஞ்ஜோதியர்,
ஆதிபகவன், பரமபிதா, இறைவன் என்றும் பல்வேறு மொழிகளில் பல்வேறு
பெயர்களால் அழைக்கின்றனர்.
உண்மை பலனை அடையும் வழி

5000
கோடி ஒளி வருட வியாபகம் உள்ள பிரபஞ்சத்தை
இயக்கும் ஒரே சக்தியாக கூறப்படும் இறைவனுக்கு உருவமற்ற,
சாயலற்ற, ஒப்புயர்வு அற்ற சக்தியின் பிறப்பிடமாக கருதி,
சாதி,சமய,குல,வருண,ஆசிரம,தேச,நிற பேதங்களையெல்லாம் கடந்த
நிலையில் வணங்கினால் உடனடி பலன் கிடைக்கும். எல்லா காலத்திலும்
கிடைக்கும். காரண,காரிய,இடம்,காலம் ஆகிய அனைத்திற்கும் அப்பாற்பட்ட
இறைவனை ஆன்மநேயத்துடன் புலால் உணவை உண்ணாமல் தவிர்த்து
முறையான அன்னதானம் செய்து வணங்குவதே உண்மை பலனை
வழங்கும். புலால் உணவை உண்டு விட்டு 1000 ஆண்டுகள் தவம்
செய்தாலும் பலன் கிடைக்காது.

அன்னதானத்தின் பலன்

அன்னதானம் என்பது 12 வயதுக்குட்ப்பட்ட ஆதரவற்ற
ஏழை சிறுவர்களுக்கோ, 72 வயதிற்கு மேற்பட்ட வயோதிகர்களுக்கோ,
கைகால் அங்கஹீனமான மனிதர்களுக்கோ சொந்த உழைப்பின் மூலமாக
செய்யும் அன்னதானமே உண்மை பலனை வழங்கும்.

பிறரிடம் பணம் பெற்று செய்யும் அன்னதானமும்,
நல்ல ஆரோக்கியம் உள்ளவர்களுக்கு பெருமைக்காக செய்யும்
அன்னதானமும் சோம்பேறிகளை உருவாக்குமே அன்றி எந்த பலனும்
அளிக்காது.

விழா காலங்களிலும், கோவில்களில் புனித
யாத்ரிகர்களுக்கு வழங்கும் உணவும் இந்த கணக்கில் வராது. மனிதர்களுக்கு தற்போது அறிவுதானமே தேவைப்படுகிறது.
அன்னதானம் செய்யும் அளவுக்கு இறைவன் அருளரசாட்சியில் உணவு பஞ்சமில்லை.
அன்புதானம், பண்புதானம், அறிவுதானம், சமாதானம்
இதுவே இன்றைய தேவை. இவையனைத்தையும் ஒருசேர வழங்கும்
ஆற்றல் சுத்த சன்மார்க்க அன்பர்களுக்கு வள்ளல் பெருமான் காட்டிய
வழியும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கொடுத்த வரமும் ஆகும்.

இந்த வரத்தை பெற எந்த வகையில் முயற்சி செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள அடுத்த தொகுப்பில் படிக்கும்படி அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

உலகினி லுயிர்களுக் குறுமிடை யூறெலாம்
விலகநீ யடைந்து விலக்குக் மகிழ்க
அகவல்: (1589-1590)


Jothi Maindhan - Cho.palani.,

No comments:

Post a Comment